Sunday, December 27, 2009

புன்னகையுடன் ஓரு பயணம்..

"புன்னகைப் பயணங்கள் " - கதிரின் புதிய தனியார் பேருந்து சர்வீஸ். ஆரம்பித்து, இரண்டு வாரமாய் சென்னையின் சாலைகளை அழகு படுத்திக்கொண்டிருக்கிறது. பெயரும் பேருந்தின் அமைப்பும் பயணங்களை வித்தியாசப்படுத்தியது. பயணிகளை இழுத்தது.ஆனால் இது கதிருக்கு சம்பந்தமில்லாத தொழில்.

கதிர், ஐ.டி துறையில் வளர்ந்து வரும் ஒரு இளம் தொழிலதிபர்.மேனேஜர் சுவாமிநாதன் கதிரின் திறமையால் ஈர்க்கப்பட்டு அவருடன் இணைந்தவர். இவனை விட வயதில் மூத்தவர்.
சுவாமிநாதனுக்கு, 'ஏன் சம்பந்தமில்லாமல் இந்த புது தொழில்?' என்ற கேள்வி எழவே செய்தது. அவனிடம் கேட்டபொழுது, "இது தொழில் இல்லை சார்..இந்த ஒரே பேருந்து மட்டும் தான்.. என்னோட ஆத்மா திருப்திக்காக" என்று சொல்லிவிட்டு நீர் தளும்ப சென்றுவிட்டான். அவனை வருத்த வேண்டாமென்று கேட்காமல் இருந்தாலும் அவன் மனதினுள் எதையோ மறைத்து அழுது கொண்டிருக்கிறான் என்று மட்டும் புரிந்தது.'இன்று எப்படியாவது கேட்டுவிட வேண்டுமென்று' அவன் அறைக்குள் நுழைந்தார்.

"கதிர், உள்ள வரலாமா?? " - கதவோரம் நின்று கேட்டார்.
"ஐயோ சார்.. என்னது பெர்மிஷன்லாம் கேட்டுக்கிட்டு.. வாங்க.."
"இது உன்னோட பர்சனல் விஷயம் பற்றி பேச.. இப்போதும் அனுமதி கிடைக்குமா? - இன்னும் நின்று கொண்டிருந்தார்.
அவர் எதைப்பற்றி கேட்கிறார் என்று புரிந்தது.
மெதுவாய், "வாங்க சார்" என்றான்.
உள்நுளைந்தவரை உடகாரவிட்டு கேட்டான், "சொல்லுங்க சார்".
உட்கார்ந்ததும் விஷயத்திற்கு வந்தார். "நான் சுத்தி வளைக்க விரும்பல. ஒரு ஐ.டி துறை தொழிலதிபர் ஒரு தனியார் பேருந்தை துவக்கி விட்டிருப்பது மற்றவர்களுக்கு வேண்டுமானால் ஆச்சர்யம். ஆனா உனக்கு வலின்னு அன்னைக்கு புரிஞ்சுக்கிட்டேன். நீ எது செஞ்சாலும் ஆச்சர்யப்படும் நான், இன்னைக்கு குழம்பி போயிருக்கேன். உனக்கு என்ன பிரச்சனைன்னு என்கிட்டே சொல்லுப்பா" -அக்கறையுடன்  என்றார்.

அவன் வளரும் காலத்தில் தோள் கொடுத்தவர்.இன்னும் அவனை உற்சாகப்படுத்துபவர்.மெதுவாய்
சொல்ல ஆரம்பித்தான்.

ந்து வருடங்களுக்கு முன்....

" 'கதிர் கண்ணு.. அப்பா இல்லாத குறை தெரியாம உன்ன இவ்ளோ தூரம் படிக்கவச்சுட்டேன்.இன்னைக்கு பெரிய காலேஜ்ல உனக்கு சீட்டு கெடச்சுருக்கு.நீ நல்லா படிச்சு அம்மா பேர காப்பாத்து. யாரடையும் சண்ட போடாம சந்தோசமா பழகனும்..சரியா?' - அம்மாவின் ஆசிர்வாதத்தோடு என் முதல் கல்லூரி பயணம் தொடங்கியது.நிறைய ஆவலுடன் இடது புற ஏழாவது இருக்கையில் உட்கார்ந்து கொண்டேன்.இனிமையாய் எதிர்பார்போடு இருந்தது பயணம்.
மூன்றாவது நிறுத்தத்தில் ஒரு தேவதை ஏறினாள்.தேவதை என்றால் புன்னகை தேவதை.இயல்பான புன்னகையோடு ஏறினாள்.என் வலதுபுற இருக்கையில் அமரும் போது என்னைப்பார்த்து புன்னகைத்தபடி அமர்ந்தாள்.

'அடடா... என்ன ஒரு அழகான புன்னகை.. கடவுளின் படைப்பில் தான் புன்னகைக்கு எத்தனை முன்னுரிமை?? மொழி தெரியாமலே யாருடனும் பேசக்கூடிய ஒரு புது மொழியை தந்திருக்கிறான்'- இறைவனை மெச்சிக்கொண்டேன்.
யாருடைய புன்னகையும் அது போல் அழகில்லை.. அது போல் என்னை இழுத்ததில்லை..

என்னை நிதானிப்பதற்குள் கல்லூரி வந்திறங்கினோம்.அன்றிலிருந்து அவளுக்காய் புதிதாய் புன்னகைக்க கற்றுக்கொண்டேன் அம்மாவிற்கு தெரியாமல்.எங்கள் பயணங்கள் புன்னகையோடு மட்டும் தொடர்ந்து கொண்டிருந்தது.அவள் வேறு வகுப்பு என்பதால் அவள் பெயர் தெரியவே ஒரு வருடம் ஆகிவிட்டது.ஒரு விழாவில் தான் அவளது பெயரும், குரலும் எனக்கு அறிமுகமாகின..
'சித்தாரா' - மிக அழகாய் பாடிச் சென்றாள். அனைவரின் கைதட்டல்களோடு என் புன்னகையும் அவளை சேர்ந்திருக்கும்.

அம்மாவின் முகம் அவளிடம் எதுவும் பேசாமல் தடுத்தது.சில நேரங்களில் சித்தாரா வராமல் போன பயணங்களில் அவளுடையது மட்டுமின்றி என்னுடைய புன்னகையும் தொலைந்திருக்கும்.
இருவரும் பேசிக்கொள்ளவில்லை என்றாலும் எங்கள் புன்னகையில் பல்லாயிரம் வார்த்தைகள் பரிமாறப்பட்டது.எங்கள் கண்கள் அன்புகளை கரைத்துகொண்டது.

மறக்க முடியாத பயணமாய் கல்லூரியின் இறுதி நாளும் வந்தது.பிரிவு உபசார விழா முடிந்து, அனைவரின் கடைசி பயணமும் எங்கள் கல்லூரி பேருந்தில் எங்கள் புன்னகைகளை தொலைத்தபடி அமைந்தது.எனக்கு சித்தாராவின் புன்னகை காண ரொம்ப ஆசையாய் இருந்தது.பேச தயக்கமாய் இருந்தது.இதோ அவள் இறங்கும் இடம் வந்துவிட்டது.மனது முழுதும் வேண்டினேன். 'ஒரு புன்னகை செய் சித்தாரா'..
படியில் இறங்குகிறாள்.. புன்னகையில்லை..
என்னைவிட்டு பிரிகிறாள்..புன்னகையில்லை..
இறங்கிவிட்டாள்.. சன்னல் வெளியே எட்டிப்பார்த்தேன்.. திரும்பினாள்..ஆனால் புன்னகைக்கவில்லை..புன்னகையற்ற அவள் முகம் காண முடியாமல் உள்ளிழுத்துக்கொண்டேன் தலையை. இன்று வரை அந்த புன்னைகையை தேடிக்கொண்டிருக்கிறேன்.." - சொல்லி முடித்தான் கதிர்.

"டைசிவரை எவ்ளோ ஏங்கியும் எனக்கு கிடைக்காத புன்னகையை எப்பொழுதாவது இந்த பேருந்தில் பயணிக்கும் ஒரு குழந்தையிடமோ காதலர்களிடமோ நான் காணக்கூடும். என் சுயநலத்திற்காகத்தான் இதை ஆரம்பித்தேன். மன்னிச்சுடுங்க சார்..இவ்ளோ நாள் நன் உங்க பார்வைல திறமையானவன்..இப்போ அடி முட்டாள்னு நெனச்சுருப்பிங்க.." - சொல்லி முடிக்கும் முன், இடைமறித்தார் சுவாமிநாதன்.

"இல்லப்பா..உன் வலி புரியுது.. எத்தனை உயர்ந்தாலும் அன்புக்காக ஏங்கும் உள்ளம் தானே மனிதர்கள்.உன்ன என்னால புரிஞ்சுக்க முடியுது.. எனக்கும் மனசு சரியில்ல..கூடிய சீக்கிரம் உன் புன்னகை உனக்கு கிடைக்கும்.." - என்று சொல்லி ஆறுதல் படுத்திவிட்டு நகர்ந்தார்.

ன்றைய பொழுது அவனின் ஞாபகங்களை கிளரியதாலோ என்னவோ,அம்மாவிற்கு தகவல் சொல்லிவிட்டு இரவை அலுவலகத்திலேயே கழித்தான். காலையில் தான் வீடு திரும்பினான்.
நுழைந்ததும் உள்ளே சுவாமிநாதன் காத்துக்கொண்டிருந்தார்.வீட்டிற்கு அம்மாவிற்கும் தனக்கும் பஞ்சாயத்து தீர்த்து வைக்கும் சமயங்களில் தான் வருவார்.
'இன்று என்ன?' - யோசித்தபடியே உள்ளே வந்தான்.
"வாங்க சார்.. எதாவது அவசர வேலையா??"
"ஆமா கதிர்."
"சொல்லுங்க சார்.. என்ன விஷயம்..??"
"நான் ரொம்ப நாளா என் பொண்ண உனக்கு கட்டிக்கொடுக்கனும்னு நெனச்சேன்..ஆனா எப்படி ஆரம்பிகறதுன்னு தெரியாம இருந்தேன்.." - அவரை இடைமறித்தான் கதிர்.
"சார்.. நான் உங்க கிட்ட என் மனச திறந்து என் நிலைமை சொல்லிட்டேன்.அம்மா தான் புரிஞ்சுக்காம சரின்னு சொன்னாலும் என்னால முடியாது சார்.. என் வலி புரியுதுனு சொன்னிங்க..இப்போ என்ன கட்டாய படுத்தறீங்களே?? - படடனு கேட்டான்.
"இல்ல இல்ல.. வலிகள் புரிந்ததால தான் என் மகளையும் நான் இதுவரை கட்டாயப்படுத்தவில்லை..நான் கல்யாண பேச்சு எடுக்கும் போதெல்லாம் அவள் இசைந்ததே இல்லை. ஆனால் நீ காரணம் சொன்னமாதிரி என்னிடம் சொல்லவில்லை என் மகள்.. என் மகள் சித்தாரா.." - அமைதியாய் சொன்னார் சுவாமிநாதன்.
சட்டென்று சிலிர்த்தான் கதிர்.
"சார்.."
"மாமானு கூப்பிடுப்பா.." - சிரித்தார்.
சமையலறையிலிருந்து அம்மாவுடன் வெளிவந்தாள் சித்தாரா.அதே புன்னகை தேவதை சித்தாரா.கையில் இனிப்புடன் நின்றிருந்தாள்.அன்று தொலைத்த கடைசி புன்னகையை இன்று பார்த்தவனாய் கண்ணீர் சிந்தினான் கதிர்.அந்த கண்ணீர் முழுக்க சந்தோஷம் இருந்தது, புதியதோர் புன்னகை பயணத்தை தொடங்கியபடி..

1 comment:

ராம்குமார் - அமுதன் said...

சூப்பர் சூப்பர் சூப்பர்... அருமையான கதை.... வெற்றி பெற வாழ்த்துக்கள்....