Sunday, December 27, 2009

புன்னகையுடன் ஓரு பயணம்..

"புன்னகைப் பயணங்கள் " - கதிரின் புதிய தனியார் பேருந்து சர்வீஸ். ஆரம்பித்து, இரண்டு வாரமாய் சென்னையின் சாலைகளை அழகு படுத்திக்கொண்டிருக்கிறது. பெயரும் பேருந்தின் அமைப்பும் பயணங்களை வித்தியாசப்படுத்தியது. பயணிகளை இழுத்தது.ஆனால் இது கதிருக்கு சம்பந்தமில்லாத தொழில்.

கதிர், ஐ.டி துறையில் வளர்ந்து வரும் ஒரு இளம் தொழிலதிபர்.மேனேஜர் சுவாமிநாதன் கதிரின் திறமையால் ஈர்க்கப்பட்டு அவருடன் இணைந்தவர். இவனை விட வயதில் மூத்தவர்.
சுவாமிநாதனுக்கு, 'ஏன் சம்பந்தமில்லாமல் இந்த புது தொழில்?' என்ற கேள்வி எழவே செய்தது. அவனிடம் கேட்டபொழுது, "இது தொழில் இல்லை சார்..இந்த ஒரே பேருந்து மட்டும் தான்.. என்னோட ஆத்மா திருப்திக்காக" என்று சொல்லிவிட்டு நீர் தளும்ப சென்றுவிட்டான். அவனை வருத்த வேண்டாமென்று கேட்காமல் இருந்தாலும் அவன் மனதினுள் எதையோ மறைத்து அழுது கொண்டிருக்கிறான் என்று மட்டும் புரிந்தது.'இன்று எப்படியாவது கேட்டுவிட வேண்டுமென்று' அவன் அறைக்குள் நுழைந்தார்.

"கதிர், உள்ள வரலாமா?? " - கதவோரம் நின்று கேட்டார்.
"ஐயோ சார்.. என்னது பெர்மிஷன்லாம் கேட்டுக்கிட்டு.. வாங்க.."
"இது உன்னோட பர்சனல் விஷயம் பற்றி பேச.. இப்போதும் அனுமதி கிடைக்குமா? - இன்னும் நின்று கொண்டிருந்தார்.
அவர் எதைப்பற்றி கேட்கிறார் என்று புரிந்தது.
மெதுவாய், "வாங்க சார்" என்றான்.
உள்நுளைந்தவரை உடகாரவிட்டு கேட்டான், "சொல்லுங்க சார்".
உட்கார்ந்ததும் விஷயத்திற்கு வந்தார். "நான் சுத்தி வளைக்க விரும்பல. ஒரு ஐ.டி துறை தொழிலதிபர் ஒரு தனியார் பேருந்தை துவக்கி விட்டிருப்பது மற்றவர்களுக்கு வேண்டுமானால் ஆச்சர்யம். ஆனா உனக்கு வலின்னு அன்னைக்கு புரிஞ்சுக்கிட்டேன். நீ எது செஞ்சாலும் ஆச்சர்யப்படும் நான், இன்னைக்கு குழம்பி போயிருக்கேன். உனக்கு என்ன பிரச்சனைன்னு என்கிட்டே சொல்லுப்பா" -அக்கறையுடன்  என்றார்.

அவன் வளரும் காலத்தில் தோள் கொடுத்தவர்.இன்னும் அவனை உற்சாகப்படுத்துபவர்.மெதுவாய்
சொல்ல ஆரம்பித்தான்.

ந்து வருடங்களுக்கு முன்....

" 'கதிர் கண்ணு.. அப்பா இல்லாத குறை தெரியாம உன்ன இவ்ளோ தூரம் படிக்கவச்சுட்டேன்.இன்னைக்கு பெரிய காலேஜ்ல உனக்கு சீட்டு கெடச்சுருக்கு.நீ நல்லா படிச்சு அம்மா பேர காப்பாத்து. யாரடையும் சண்ட போடாம சந்தோசமா பழகனும்..சரியா?' - அம்மாவின் ஆசிர்வாதத்தோடு என் முதல் கல்லூரி பயணம் தொடங்கியது.நிறைய ஆவலுடன் இடது புற ஏழாவது இருக்கையில் உட்கார்ந்து கொண்டேன்.இனிமையாய் எதிர்பார்போடு இருந்தது பயணம்.
மூன்றாவது நிறுத்தத்தில் ஒரு தேவதை ஏறினாள்.தேவதை என்றால் புன்னகை தேவதை.இயல்பான புன்னகையோடு ஏறினாள்.என் வலதுபுற இருக்கையில் அமரும் போது என்னைப்பார்த்து புன்னகைத்தபடி அமர்ந்தாள்.

'அடடா... என்ன ஒரு அழகான புன்னகை.. கடவுளின் படைப்பில் தான் புன்னகைக்கு எத்தனை முன்னுரிமை?? மொழி தெரியாமலே யாருடனும் பேசக்கூடிய ஒரு புது மொழியை தந்திருக்கிறான்'- இறைவனை மெச்சிக்கொண்டேன்.
யாருடைய புன்னகையும் அது போல் அழகில்லை.. அது போல் என்னை இழுத்ததில்லை..

என்னை நிதானிப்பதற்குள் கல்லூரி வந்திறங்கினோம்.அன்றிலிருந்து அவளுக்காய் புதிதாய் புன்னகைக்க கற்றுக்கொண்டேன் அம்மாவிற்கு தெரியாமல்.எங்கள் பயணங்கள் புன்னகையோடு மட்டும் தொடர்ந்து கொண்டிருந்தது.அவள் வேறு வகுப்பு என்பதால் அவள் பெயர் தெரியவே ஒரு வருடம் ஆகிவிட்டது.ஒரு விழாவில் தான் அவளது பெயரும், குரலும் எனக்கு அறிமுகமாகின..
'சித்தாரா' - மிக அழகாய் பாடிச் சென்றாள். அனைவரின் கைதட்டல்களோடு என் புன்னகையும் அவளை சேர்ந்திருக்கும்.

அம்மாவின் முகம் அவளிடம் எதுவும் பேசாமல் தடுத்தது.சில நேரங்களில் சித்தாரா வராமல் போன பயணங்களில் அவளுடையது மட்டுமின்றி என்னுடைய புன்னகையும் தொலைந்திருக்கும்.
இருவரும் பேசிக்கொள்ளவில்லை என்றாலும் எங்கள் புன்னகையில் பல்லாயிரம் வார்த்தைகள் பரிமாறப்பட்டது.எங்கள் கண்கள் அன்புகளை கரைத்துகொண்டது.

மறக்க முடியாத பயணமாய் கல்லூரியின் இறுதி நாளும் வந்தது.பிரிவு உபசார விழா முடிந்து, அனைவரின் கடைசி பயணமும் எங்கள் கல்லூரி பேருந்தில் எங்கள் புன்னகைகளை தொலைத்தபடி அமைந்தது.எனக்கு சித்தாராவின் புன்னகை காண ரொம்ப ஆசையாய் இருந்தது.பேச தயக்கமாய் இருந்தது.இதோ அவள் இறங்கும் இடம் வந்துவிட்டது.மனது முழுதும் வேண்டினேன். 'ஒரு புன்னகை செய் சித்தாரா'..
படியில் இறங்குகிறாள்.. புன்னகையில்லை..
என்னைவிட்டு பிரிகிறாள்..புன்னகையில்லை..
இறங்கிவிட்டாள்.. சன்னல் வெளியே எட்டிப்பார்த்தேன்.. திரும்பினாள்..ஆனால் புன்னகைக்கவில்லை..புன்னகையற்ற அவள் முகம் காண முடியாமல் உள்ளிழுத்துக்கொண்டேன் தலையை. இன்று வரை அந்த புன்னைகையை தேடிக்கொண்டிருக்கிறேன்.." - சொல்லி முடித்தான் கதிர்.

"டைசிவரை எவ்ளோ ஏங்கியும் எனக்கு கிடைக்காத புன்னகையை எப்பொழுதாவது இந்த பேருந்தில் பயணிக்கும் ஒரு குழந்தையிடமோ காதலர்களிடமோ நான் காணக்கூடும். என் சுயநலத்திற்காகத்தான் இதை ஆரம்பித்தேன். மன்னிச்சுடுங்க சார்..இவ்ளோ நாள் நன் உங்க பார்வைல திறமையானவன்..இப்போ அடி முட்டாள்னு நெனச்சுருப்பிங்க.." - சொல்லி முடிக்கும் முன், இடைமறித்தார் சுவாமிநாதன்.

"இல்லப்பா..உன் வலி புரியுது.. எத்தனை உயர்ந்தாலும் அன்புக்காக ஏங்கும் உள்ளம் தானே மனிதர்கள்.உன்ன என்னால புரிஞ்சுக்க முடியுது.. எனக்கும் மனசு சரியில்ல..கூடிய சீக்கிரம் உன் புன்னகை உனக்கு கிடைக்கும்.." - என்று சொல்லி ஆறுதல் படுத்திவிட்டு நகர்ந்தார்.

ன்றைய பொழுது அவனின் ஞாபகங்களை கிளரியதாலோ என்னவோ,அம்மாவிற்கு தகவல் சொல்லிவிட்டு இரவை அலுவலகத்திலேயே கழித்தான். காலையில் தான் வீடு திரும்பினான்.
நுழைந்ததும் உள்ளே சுவாமிநாதன் காத்துக்கொண்டிருந்தார்.வீட்டிற்கு அம்மாவிற்கும் தனக்கும் பஞ்சாயத்து தீர்த்து வைக்கும் சமயங்களில் தான் வருவார்.
'இன்று என்ன?' - யோசித்தபடியே உள்ளே வந்தான்.
"வாங்க சார்.. எதாவது அவசர வேலையா??"
"ஆமா கதிர்."
"சொல்லுங்க சார்.. என்ன விஷயம்..??"
"நான் ரொம்ப நாளா என் பொண்ண உனக்கு கட்டிக்கொடுக்கனும்னு நெனச்சேன்..ஆனா எப்படி ஆரம்பிகறதுன்னு தெரியாம இருந்தேன்.." - அவரை இடைமறித்தான் கதிர்.
"சார்.. நான் உங்க கிட்ட என் மனச திறந்து என் நிலைமை சொல்லிட்டேன்.அம்மா தான் புரிஞ்சுக்காம சரின்னு சொன்னாலும் என்னால முடியாது சார்.. என் வலி புரியுதுனு சொன்னிங்க..இப்போ என்ன கட்டாய படுத்தறீங்களே?? - படடனு கேட்டான்.
"இல்ல இல்ல.. வலிகள் புரிந்ததால தான் என் மகளையும் நான் இதுவரை கட்டாயப்படுத்தவில்லை..நான் கல்யாண பேச்சு எடுக்கும் போதெல்லாம் அவள் இசைந்ததே இல்லை. ஆனால் நீ காரணம் சொன்னமாதிரி என்னிடம் சொல்லவில்லை என் மகள்.. என் மகள் சித்தாரா.." - அமைதியாய் சொன்னார் சுவாமிநாதன்.
சட்டென்று சிலிர்த்தான் கதிர்.
"சார்.."
"மாமானு கூப்பிடுப்பா.." - சிரித்தார்.
சமையலறையிலிருந்து அம்மாவுடன் வெளிவந்தாள் சித்தாரா.அதே புன்னகை தேவதை சித்தாரா.கையில் இனிப்புடன் நின்றிருந்தாள்.அன்று தொலைத்த கடைசி புன்னகையை இன்று பார்த்தவனாய் கண்ணீர் சிந்தினான் கதிர்.அந்த கண்ணீர் முழுக்க சந்தோஷம் இருந்தது, புதியதோர் புன்னகை பயணத்தை தொடங்கியபடி..

Sunday, September 20, 2009

காதல் என்றால் நீ..!

திருடவே கூடாது என்ற

பாடத்தையும் மீறி

திருடிவிடுகிறேன் பிடித்த அவளின்

அழகிய புன்னகையை...!

உற்சாகமாய்தான் விடிகிறது

உன் உளறல் ரசித்த

ஒவ்வொரு இரவும்..!

உனக்கு பிடிக்கும் என்பதால்                      
கவிதையை ரசிக்கிறாய்..
எனக்கு பிடிக்கும் என்பதால்
உன்னை ரசிக்கிறேன்..!

மழலை புன்னகை பிடிக்கும்
என்று சிரிக்கிறாய்
உன் புன்னகை பார்த்தவாறு
மழலையாகி போகிறேன்..!                                       

நீ அழகாய் சிரிக்கிறாய்                                             
என்றதும் வெட்கபடுகிறாயே..
அழகாய் வெட்கபடுகிறாய் என்றால்
எப்படி சிரிப்பாய்..!!

புன்னகைக்கிறேன் என்பதால்
என்னை பிடிக்கும் என்கிறாய்..
உனக்குபிடிக்கும் என்பதால்
புன்னகைக்கிறேன்..!

என் வாழ்வின் அகராதி முழுதும்
காதல் என்றால் நீ
நீ என்றால் காதல்..!

உன் அழகின் விளக்கம் கேட்டிருந்தாய்..
உலகின் மிகச்சிறந்த பூவும்
தோற்றுபோகும் உன் அழகில் என்று
சொன்னவுடன் சிரிக்கிறாய் வெட்கமுடன்...
அய்யோ !! நீ இப்படி சிரித்தால்
உலகமே தோற்றுவிடும் அல்லவா..!                
சொன்னவுடன் எப்படி சிரிக்கிறாய்..!

தோல்விகளுக்காய் வருந்தும் நான்
முதல் முறை சிரித்தேன்
உன்னிடம் தோற்றபோது..
இப்படி காதல் செய்யும் உன்னிடம்
எப்படி தோற்காமல் போக..?

உன் கண்ணீர் பிடிக்கும்
என்றதும் அதிர்கிறாயே..
அது புன்னகையால் மட்டுமே
வரும் கண்ணீர்
என்று சொல்லும் முன்...!


உங்கள் சேவகன்..,
..laajee..,

Thursday, September 3, 2009

நிஜத்தின் நிழலாய் கண்ணீர்..!!




முடியாமலே விடிந்த..
கனவுகளின் சுவடுகளாய்...
கன்னங்களில் கண்ணீர்..!

மொத்த வாழ்கையையும் பரிசளித்தும் ..
எட்டி உதைக்கும் பிள்ளைகளுக்காய்...
தாய்மையுடன் வேண்டிநிற்கும் கண்ணீர்..!

ரசித்த காதலையும்
பெற்றோருக்காய் துறந்து வாழ்வோரிடையே...
காதலுடன் வாழ்த்தி வாழும் கண்ணீர்..!

குழந்தையில் கிடைக்காததற்க்காய் கலங்கி...
கிடைத்ததற்க்காய் மகிழ்ந்து நிற்கையில்..
அடையாளம் அறிந்தமையாய் கண்ணீர்..!

பிரிதலின் ஆழத்திலும்...
புரிதலின் அன்பிலும், இனம் புரியாமலே..
இயல்பாய் உதிர்க்கும் கண்ணீர்..!

உலகமே வியந்து போற்றும் நமக்கான வெற்றியால்...
அன்னையின் கண்களில் மலரும்...
சந்தோஷ சலனமாய் கண்ணீர்..!

எதிர்பார்த்த வெற்றியிலும்...
எதிர்பார்க்கா ஏமாற்றத்திலும்..
எட்டிவரும் எண்ணம் புரிந்த கண்ணீர்..!

பரிச்சயமற்ற பயன நாட்களில்..
காற்றுகவரலாய் நுழைந்த தூசியால்...
நோக்கமற்ற ஏதுமாய் கண்ணீர்..!

சந்தோஷமோ, வருத்தமோ..
அமைதியோ, ஆராவாரமோ...
ஒரே சுவையில் கண்ணீர்..!
வெற்றியோ, தோல்வியோ...
வருகையோ, பிரிவோ....
ஒரே நிறத்தில் கண்ணீர்..!

சிரிக்கையில் விருப்பமாய்...
அழுகையில் வெறுப்பாய்...
பல பரிணாமங்களின் மொத்தமாய் கண்ணீர்..!

உனக்கும் எனக்கும் பொதுவாய்..
உலகம் முழுக்க உதிர்ந்தபடியாய்..
நினைவுகளின் வெளிப்பாடாய்...
நிஜங்களின் நிழலாய் கண்ணீர்...!!!

பிறக்கையிலும்,இறக்கையிலும்..
பிடித்தாலும்,பிடிக்காவிட்டாலும்..
சுகங்களையும், சோகங்களையும்...
சுமந்தபடியே.....
என்றும் எப்போழுதுமாய்...
நமக்கான கண்ணீர்..!!!

உங்கள் சேவகன்..,
..laajee..,

Wednesday, August 26, 2009




வாழ்க்கைக்காக வாழலாம்:


நேற்றைய நாம்., இன்றைய நாம், நாளைய நாம்..,
எல்லாமே நம்மால்தான், நம்மோடுதான்..,

மனிதனாய் நாம் பிறந்திருக்கிறோம்..,
இதைவிட ஓரு பெரிய வாய்ப்பை எங்கு தேட....

இத்தனை பெரிதான வாய்ப்பு......
மற்றவைகள் எத்துனை பெரிதாகும்..!!

காகித பூக்கள்போல் பறந்துவிடும் ....,
மறக்க முடியா இளமை காலங்கள்....!!

இன்று உழைக்காமல் என்று தழைக்க???

நம்மை ஈன்றது அன்னை என்பது உண்மைதான்.....,
நாம் மனிதர்கள் என்பது உண்மைதான்...,

அனைவருக்கும் சமமாய் நேரம் என்பதும் உண்மைதான்...,
நாம் மரிக்க போவதும் உண்மைதான்....,
சாதனை சக்தியை பறிக்க போவதும் உண்மைதான்...!!!

ஓரு முறை சோற்றுக்காக வாழாமல்....,
வாழ்க்கைக்காக வாழலாம்....!!!
வாழ்க்கையோடு வாழ்க்கையாக....!!!!

உங்கள் சேவகன்...,
..laajee..,

Saturday, July 25, 2009

உடையும் தெய்வத்தின் குழந்தைகள் (அனாதைகள்)...




பலர் ருசி அறியும் காலத்தில்,
அவர்கள் பசி அறிகிறார்கள்!

பலர் சுகம் அறியும் காலத்தில்,
அவர்கள் சுமை அறிகிறார்கள்!

பலர் சினம் அறியும் காலத்தில்,
அவர்கள் குணம் அறிகிறார்கள்!

பலர் சோகம் அறியும் காலத்தில்,
அவர்கள் லோகம் அறிகிறார்கள்!

இப்படி அனைத்தையும் பலருக்கு முன்னமே அடைந்த அவர்களால்,
பலர் பெற்ற விலைமதிக்க முடியா..., அன்னை என்ற,
தெய்வத்தின் உடைக்கமுடியா பாசத்தை மட்டும்...

அடைய முடியாமல் உடைகிறார்கள் பல துளியாய்!!!!!!!??


(என்னுடைய இந்த 3 வது கவிதையை ஆதரவற்ற என் சகோதர, சகோதிரிகளுக்கு சமர்பிக்கிறேன்)...,


உங்கள் சேவகன்,
..laajee..,



..வீடு..!!!



தவழும் வயதிலிருந்தே...
தடுக்கி விழுந்து, எழுந்த வாசல்!!!

அன்னையின் சேலை நுனி பிடித்து
நடந்த, நடக்க பழகிய முற்றம்!!!

சகோதரமாய் சண்டையிட்டு சில அழுகை...
பல சிரிப்பு கண்ட திண்ணை!!!

புன்னகை, காதல், சோகம்...எத்தனையோ????
அத்தனை முகங்களையும் கண்ட கூடு!!!

பிரிந்து எங்கு சென்றிருந்தாலும்,
வருகையை புரிந்து குதூகலிக்கும் கோவில்!!!!

அசதியான நேரத்தில் அண்ணாந்து பார்க்கையில்
அறியும் ஓட்டை விழுந்த கூரையால்
வசதியாக வாழ கனவு கொடுத்த பள்ளி!!!!

திருமணம் முடிந்து செல்லும் மகளிர்க்காய்,
வருத்தமாய் வெறிச்சமுகம் காட்டும் சார கோபுரம்!!!!

நாம் மடிந்து போக நினைத்தாலும்
இடிந்து போகாத ஒரே சொந்தம்..
நேசம் , பாசம் மறவாத பந்தம்!!!!
அதுதான் நமக்கான வீடு!!!!!

உங்கள் சேவகன்,
..laajee..,

மரணம் கொண்ட மணங்கள் வேண்டாமே...!!!


ஒத்த புள்ள பெத்து போட்டு
நித்தம் கனவு தானும் கண்ட..
ஒத்த புருசன் போன பின்னே
புள்ள மேல உசிர வச்சி
நானும் கனவு நாலு கன்டேன்!!!

அண்ட வீடு துணி துவச்சி
ஆச்சியம்மா ஆட்ட மேச்சி
வந்த காசில் வலி மறக்க
அடுக்கு மல்லி சூடிவிட்டு
புள்ள உன்ன படிக்க வச்சேன்!!!

ஆச காட்டி அழச்ச பய
பின்ன நீயும் ஓடிபோன...!!
பாசம் தணிந்து போன பின்னே...
மோசம் போயி வந்தியடி!!

நித்தமு நீ அழுவுறத
பெத்த வயிரு தாங்கலயே..!!
தத்தி வந்து கேட்ட என்ன,
செத்து போக சொன்னியம்மா!!!!

கஞ்சி கூட குடிக்காம
நீ அழுவ நான் பார்க்க
நெஞ்சி தண்ணி வத்தி போயி.
நானும் இப்ப செத்து போறேன்...!!!

காலந்தள்ளி புத்தி வந்தா
பெத்த கனவ நனவாக்கு... அப்ப
சிரிச்ச ஊரு கண்ணு பட்டா
சுத்திபோட யாரிருக்கா...???

உங்கள் சேவகன்,
..laajee..,

வாழ்க்கைதான் எவ்வளவு விசித்திரமானது..!!!!




பகிராமலே மறைந்து போன
பல நேர புன்னகை..!!!

நிரம்பாமலே சுருங்கி போன.
பசித்த வயிறு..!!!

துடைக்காமலே விழுந்துவிட்ட
உடைந்த கண்ணீர்..!!!

அடுத்த நாள் நீடிக்காமலே போன
அழகாய் பார்த்த அன்பு..!!!

எழுதாமலே விட்டு போன
பிடித்த பல பெயர்கள்..!!!

சொல்லாமலே தங்கிவிட்ட
உண்மை காதல்கள்..!!!

இப்படி எதற்கும் தடைபடாமலே
நீண்ட லட்சிய பாதை..!!!

வாழ்க்கை தான் எவ்வளவு விசித்திரமானது!!!


உங்கள் சேவகன்,
...laajee..,

பிச்சை மனிதன்..!!





பட்டினியோடு உறங்க முயன்று....
பசியோடு அதிகாலை எழுந்து
ருசி மறந்து தன்னீர் பருகி..
பலர் வீட்டு எச்சத்தை நம்பி
இச்சையாய் ஆசை கொண்டு..
தெரியாத தாயை வாய் நிறைய கூவி
மிட்சமாய் கிடைத்ததை
மிட்சமில்லாமல் உன்ன நினைத்து...
வாலாட்டி உரசி நிற்கும் தெருவோர நாய்க்கிட்டு
நானும் உண்டதுண்டு..!!!

காலத்திற்கு பிட்சையாய்
இறந்து போகும் எனக்காய்
தினம் கண்ட தெருவும் வருந்தாது....
நான் கானா தாயும் வருந்தாது....

ஓரு வேலை அந்த நாய் வருந்தலாம்..
பசிக்கு உதவ நாதியற்ற நாட்களில்...
பிச்சை மனிதன் என்னை நினைத்து..

அன்று அது குறைக்கலாம்...
எனக்காய் ஒருமுறை...
அம்மா என்று அதன் மொழியில்..!!!!


உங்கள் சேவகன்..,
..laajee..,

ஐந்து ரூபாய் நாணயம்::



சாலையோரம் நடக்கையில் கிடைத்த ஐந்து ரூபாய் நாணயம்..,
யாரோ தொலைத்திருந்தார்கள் !!!!

அவர்களுக்கு அது காசுதான் ......ஆனால்,
கண்டெடுத்த எனக்கு அதிஷ்ட சந்தோஷம் ஆனது!!!

என் அந்த நிமிட புன்னகையில் தொலைத்தவர் வாழ்ந்திருந்தார்....
உண்மைதான் உணர்ந்தேன்!!!!

நானும் தெரிந்தே தொலைக்கிறேன் நாணயங்களை.!!

யாரேனும் புன்னகைக்க கூடும்......
அதில் நான் வாழக்கூடும்....!!

பார்க்க ஆசைதான்...
அவரின் புன்னகையை,
அதில் நான் வாழ்வதை!!!

ஒருவேளை புன்னகை பொய்த்து...
நம்பிக்கை மெய்க்காமல் போனால்???

நம்புகிறேன் தொலையும் நாணயங்கள் பிறரின் புன்னகைக்கே!!!!

நான் விட்ட நாணயம் உங்களில் யாரையேனும்....
புன்னகை படுத்தும் என்ற நம்பிக்கையில்.........,

நடக்கிறேன் திரும்பி பார்க்க மனமில்லாமல் !!!!!!
எனக்கான சந்தோஷ நாணயத்தை தேடி!!!!!!

யாரேனும் தொலைதிருப்பீர்கள் என்ற ஆசையில் !!!!



உங்கள் சேவகன்..
..laajee..,

வாழ்க்கைதான் எவ்வளவு அழகானது:






தன்னை மிதிபோர்க்கும் நேசத்துடன்
நறுமணத்தை பரிசளிக்கும் மலர்கள்..!!

தன் மீது மோதி விளையாடுவோர்க்கும்
திறந்து வழிகாட்டும் வெற்றி வாசல்..!!

கோபத்தை கொட்டித் தீர்ப்போருக்கும்
அழகிய புன்னகையை அன்பளிக்கும் குழந்தைகள்..!!!

வாய்ப்பை வரவேற்காமல் வசை பாடுவோர்க்கும்
வாழ வழிகாட்டும் வாழ்க்கை..!!!

தன்னை திட்டித் தீர்ப்போருக்கும்
அதிசய அறிவாய் அனுபவம் தரும் தோல்விகள்...!!!

சேர்ந்து வாழாமல் போன காதலர்களுக்கும்
கவினயமாய் கவிதை தரும் காதல்கள்..!!!

வெட்டி வீழ்த்திய மனிதர்க்கும் உண்டுமகிழ
சுவையாய் உணவுதரும் உயிர்விட்ட உயிர்கள்..!!!

தான் கிழியப்போகிறோம் என்று தெரிந்தும்
நினைவுகளை நிரம்ப கொண்டுதரும் கடித உறைகள்..!!!

தனை தள்ளி ஒதுக்கிய பிள்ளைகளுக்க்காகவும்
கடவுளிடம் கருணை கேட்க்கும் தாய்கள்..!!!

அடடா!! கோபமற்ற தருணங்களில்
வாழ்க்கைதான் எவ்வளவு அழகானது.....
எதிர்பாராமல் கிடைக்கும் பரிசுகள் போல..!!!

உங்கள் சேவகன்..,
..laajee..,

அம்மாவின் குரல் தேடி..,




(laajee -இன் டைரியில் அம்மா என்ற கதை தொகுப்பில் இருந்து ஒரு கதை உங்களுக்காய் உங்கள் அன்பிற்காய், அன்னையின் அற்புதம் அறிவதற்காய்..)

8 மணி நேர பயணக் களைப்பில் வந்ததும் படுத்து உறங்கி போயிருந்தேன். பயணக் களைப்பின் அழுத்தமோ என்னவோ காலை வெகு நேரம் கழித்து எழுந்தும் சற்று சோம்பலாகவே இருந்தது.கடைசி இரண்டு நாள், தொழில் நிமிர்த்த மீட்டிங்கில் மொபைலை மறந்திருந்ததால் எழுந்தவுடன் முதல் வேலையாக அதனை பெட்டியில் இருந்து எடுத்து ஆண் செய்தேன். மொபைல் அதன் முழுமையை அடைந்த உடனேயே ஒலித்ததில் தெரிந்தது யாரோ தொடர்ந்து முயற்சி செய்திருக்கிறார்கள் என்பது. ஆர்வமாய் விடை அளிக்க செவியில் வைத்த உடனேயே எதிர்முனை பரபரப்பாக பேச ஆரம்பித்தது....

"என்னப்பா கார்த்தி, எத்தனை நாளா உனக்கு போன் பண்ணேன்.. போகவே இல்லப்பா... சரி உடனே நீ கிளம்பி ஊருக்கு வாடா.. அம்மாவுக்கு உடம்பு முடியல.. வந்து நீ ஒரு தடவ பார்த்துட்டு போயா..".. பேசியது மாமா தான். குரல் சிறிது உடைந்தே இருந்தது. எனக்கும்தான்.! "என்ன மாமா அம்மாவுக்கு என்னாச்சி? இப்ப எப்படி இருக்காங்க? மருத்துவர்ட்ட காமிச்சிங்களா? " என் அத்தனை கேள்விகளுக்கும் அவர் சொன்ன பதில் கிளம்பி வா என்பதே..

அவசர அவசரமாக விமான சீட்டு வாங்கி நாட்டை நோக்கி பயணிக்கையில் மனது முழுக்க அம்மாவின் நினைப்பே. அப்பா நான் சிறியவனாக இருந்த பொழுதே இறந்து போயிருந்ததால் எனக்கான அத்தனையும் அம்மாதான் செய்தார். காலைல வேலைக்கு போயிட்டு சாயங்காலம் தான் வருவார். அதுக்கு பிறகு பசியோடு இருக்கும் எனக்கு அவசரமா சமைச்சி போட்டுட்டு தானும் உண்ணுவார். அம்மா கஷ்ட படுறத பார்க்கிற நேரம்லாம் ரொம்ப அழுகையா வரும். இருந்தாலும் வெளி காட்டாமலே கவனமா படிச்சி கல்லூரி போனேன். அம்மா ஆசை எல்லாம் எப்படியாவது நான் ரொம்ப பெரிய ஆளா ஆயிட்டு கோட்டு சூட்டுலாம் போட்டு ஊருக்கு வரணும், எங்க ஊர்லே பெரிய மனுஷனா இருக்கணும்னு தான். அதுக்காகவே எனக்கு கிடைச்ச வெளிநாட்டு வேலைய மறுப்பேதும் சொல்லாம செய்ய சொன்னாங்க. அம்மா பட்ட கஷ்டம்லாம் போக்க எனக்கு அத்தன ஆசையா இருந்துச்சு. அத்தனையும் மனசுல வச்சிதான் ரொம்ப கஷ்ட பட்டு வேலை செஞ்சிட்டு இருக்கேன், எனக்கு நினைவு தெரிஞ்சதிலிருந்தே அம்மா நகை போட்டு நான் பார்த்ததே இல்ல. இதோ என்னோட பெட்டியில நான் ஆச ஆசையா அம்மாவுக்கு வாங்கி போற நகைகள், சேலைகள் எல்லாம்.. இதெல்லாம் பார்த்து அம்மா எப்படிலாம் சந்தோஷ படுமோ? பல கற்பனைகளோடே நாடு வந்து சேர்ந்தேன்.

விமான நிலைய வாசலிலேயே மாமா, தோழர்கள் என ஓரு கூட்டமே இருந்தார்கள் அனைவர் கண்களிலுமே நீர் தொற்றி இருந்ததுமே மனசுக்கு வலியா இருந்தது. ஆச ஆசையா மாமாவ பார்த்து கேட்டேன்! அம்மா எப்படி மாமா இருக்கு? கேள்வி முடியும் முன்னமே அவர் அழ தொடங்கி சொன்னார். "கார்த்தி , அம்மா நம்மள விட்டுட்டு போயட்டாங்கய்யா, உனக்கு போன் செய்து செய்து நீ கிடைக்கல.. நாளாகவே நாங்களே அடக்கம் பண்ணிட்டோம்பா" சொல்லிக்கொண்டே போனார்....
தெய்வமே! முதல் முறை உலகம் இருண்டது யார் பேசுவதும் கேட்க வில்லை.ஆம் அழுதேன்.. அழுதேன்.. அநேதமாக நான் அழுததை பார்த்து அந்த விமான நிலைய வாசலில் பலர் அழுதிருப்பார்கள். எத்தனை கனவுகள், எத்தனை ஆசைகள் எல்லாமே முற்று பெறாத கனவாக்கி விட்டு எப்படி அம்மா இறந்தார்? வீடு வந்து சேர்வதற்குள் கண்களில் நீர் வற்றி வலி கூடி இருந்தது.

இதோ என் அம்மா கோலமிட்ட வாசல்.. குப்பைகளின் கூடாரமாய், நான் ஆடி விளையாடிய கதவு.. அன்னையின்றி அனாதையாய் என்னை போல் உடைந்து போய்.. எத்தனை பாசமாய் பார்த்த வீடு இன்று அத்தனையும் எங்கே...? இரண்டு நாள் முழுக்க அழுகைதான்.. ஆறுதல் தந்த சொந்தங்கள் எல்லாம் சென்றிருந்தனர். பக்கத்து வீட்டு அக்கா மட்டும் உணவு கொண்டு வந்து தந்தவாறே இருந்தார். மாலை பொறுமையாக என்னருகே அமர்ந்த அக்கா பேச ஆரம்பித்தார்... "அம்மாவுக்கு ரொம்ப ஆசைடா உனக்கு ஒரு கல்யாணம் பண்ணி பார்க்கணும்னு. அடிக்கடி சொல்லுவாங்க. என் புள்ள பசி தாங்க மாட்டான். இப்ப என்ன பண்ணுறானோ!? புள்ளைக்காக அரிசி பானைல நாட்டுகோழி முட்டைலாம் எடுத்து வச்சிருக்கேன். புள்ள என்னைக்கு வருமோ ! வயிறு நிறைய சாப்பிட சொல்லனும்னு சொல்லி சொல்லி ஆற்றிபோகும்டா.." அக்காவும் ஆறுதல் சொல்லி வெளியேறினார்.

நானும் கொண்டுபோன நகை, புடவை எல்லாத்தையும் அம்மா போட்டோ முன்னாடி வச்சிட்டு எழுகையில் அரிசி பானை கண்ணில் படவே திறந்து பார்த்தேன். உள்ளே அம்மா ஆச ஆசையா அடுக்கி வச்சிருந்த நாட்டு கோழி முட்டைகள்.. பார்த்ததுமே மறுபடியும் அழுகை வந்தது.. அழுகையிலே எங்கோ ஒலித்தது அம்மாவின் குரல்...
"அய்யா சாமி.. அரிசி பானைல நாட்டு கோழி முட்டை வச்சிருக்கேன்.. தினமும் காலைல குடிச்சிருயா.. அம்மா இருக்கும் போது அழாத ராசா"
முட்டையில் விழுந்த கண்ணீரை மறந்தவாறே என் அன்னையின் குரல் தேடி நகர்ந்தபடியே நான் ...

உங்கள் சேவகன்...,
..laajee..,